தொடருகிறது பெற்றோர் புறக்கணிக்கப்படும் அபாயம்.!

திங்கள், அக்டோபர் 03, 2011

(3) ஜிஹாதை விட மேலானது


قُلْ تَعَالَوْاْ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلاَّ تُشْرِكُواْ بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا



6:151. ''வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு  உதவுங்கள்!..



ஜிஹாதை விட மேலானது



வயதான தாய், தந்தையரை பராமரித்து அதன் மூலம் சொர்க்கம் செல்வதை தனக்கு தடையாக்கிக் கொண்ட மனிதன் நாசமாகட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஹூரைரா ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பெற்றோர்கள் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்தவராக இருந்து (அவர்களுக்கு பனிவிடை செய்வதன் மூலம்)  சுவனம் செல்லாதவன் நாசமாகட்டும்,  நாசமாகட்டும்!  நாசமாகட்டும்! எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள் - நூல் :முஸ்லிம்

மனித சமுதாயம் முழுமைக்கும் ஒளி விளக்காக இறைவனால் அனுப்பப்பட்ட அண்ணலெம் பெருமானார்(ஸல்) அவர்கள் அந்த சமுதாயத்தின் மீதே ஒரு விஷயத்திற்காக சாபமிடுகிறார்கள் என்றால் ந்த விஷயம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கொப்ப  நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இஸ்லாத்தின் எதிரிகளின் தாக்குதலை முறியடித்து மார்க்கத்தை காப்பதற்காக புனிதப்போர் புரிவது 
மறுமைக்கு வெற்றியைக் குவிக்கும் மகத்தான செயலாகும் அதற்காக சுவனமேப் பரிசென்றும் இஸ்லாம் கூறுகிறது. 


அந்த மகத்தான செயலைச் செய்வதை விட வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்து ஜிஹாதுக்கு கிடைக்கும் மகத்தான கூலியை இவ்வுலகிலேயே பெற்றுக்கொள்ளுங்கள் என்று இறைவனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ்  இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒருமுறை அண்ணலார் அவர்களின் சமூகம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா? என வினவுகிறார் அதற்கு அண்ணலார் அவர்கள் உமக்கு தாய், தந்தை உண்டா? எனக் கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்று கூறவே அண்ணலார் ''அவ்விருவருக்கும் (பணிவிடை செய்வதன் மூலமாக) ஜிஹாதை அடைந்து கொள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். நூல்: அபூதாவூத்:2529

இன்னுமொருக் குழுவினர் எமனிலிருந்து வருகை தந்து அன்னல் அவர்களிடம் புனிதப் போர் புரிய அனுமதிக்கேட்டனர் அதற்கு அண்ணல் அவர்கள் உங்களது பெற்றோரிடம் அனுமதிப் பெற்று வந்தீர்களா ? என்றுக் கேட்டார்கள் அதற்கந்தக குழுவினர் ஆம் ! ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை. 


அழுது போக வேண்டாம் என்றுக் கூறி மறுத்து விட்டனர் அதை மீறியே நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம் என்று அவர்கள் கூறியதும் உடனே திரும்பி சென்று அவர்களை அழவைத்தது போல் சிரிக்க வைத்து உள்ளம் குளிறச் செய்யுங்கள் என்றுக் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

எமன் நாட்டிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த ஒரு நபரிடம் ''உம் பெற்றோரின் அனுமதியைப் பெற்று வந்து அறப்போரில் கலந்துகொள்ளும்  இல்லையேல் அவ்விருவருக்கும் பணிவிடை செய்யும்'' என நபியவர்கள் பகர்ந்தார்கள். அபூதாவூத். ''உன் பெற்றோரிடம் சென்று அவர்களை அழவைத்தது போல் சிரிக்கவையும்!'' என பகர்ந்தார்கள். நூல்: அபூதாவூத்.

எமன் நாட்டில் தனது பெற்றோரை அழுபவர்களாக விட்டு விட்டு ஜிஹாதில் கலந்து கொள்வதற்காக நபியவர்களிடம் பைஅத் செய்ய வந்த ஒருவரிடம் நபியவர்கள் மேல்கானுமாறு உபதேசம் செய்து திருப்பி அனுப்பி வைக்கிறார்கள்.

பிள்ளையைப் பிரிவதற்கு  மனமில்லாமல் அழுத தாய்தந்தையரை கண்டுகொள்ளாமல் விட்டு வந்தவர்களை காருண்ய நபியவர்கள் நாட்டின் பாதுகாப்பை விட வயதான தாய்தந்தையரை பராமரிப்பதே மேலானது என்பதை வலியுருத்தும் விதமாக திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

மேற்கானும் நபிமொழிப் பிரகாரம் பராமரிக்க வேண்டிய நிலையில்  வயதான தாய்,தந்தை ஒருவருக்கு இருப்பார்களேயானால் ஜிஹாத் அவர்களுக்கு அடுத்தக் கடமை தான்முதல் கடமை அவர்களை பராமரிப்பது தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று  நம்மில் ஜிஹாத் செய்யப்போகிறேன் என்று புறப்படுபவர்கள் பலர் தங்கள் தாய், தந்தையருடைய வயதான கவலைக்கிடமான நிலைப்பற்றி அறவே சிந்திப்பதில்லை,  என்பது மிகவும் வேதனையளிக்கக்கூடிய ஒன்றாகும்.

அவர்களை அழ வைத்தது போல் திரும்பிச் சென்று சிரிக்க வையுங்கள் ! என்று திருப்பி அனுப்பி விடுகின்ற அழகிய முன்மாதிரியான அன்னல் நபியவர்களுடைய செயல்பாட்டை ஜிஹாத் செய்யப் புறப்படும் இன்றைய இளைஞர்கள்  சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். ஜிஹாத் செய்ய வந்திருக்கிறேன் என்றுக் கூறுபவனுடைய குடும்ப நிலைஅவனுடைய பொருளாதார நிலை எதைப்பற்றியும் ஆராயமால் அவனை ஏற்றுக்கொள்ளும் அமைப்பினர் முக்கியமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இன்று வயதான தாய், தந்தையர் பராமரிக்காமல் விட்டு விடப்படுவதன் மூலம் அல்லாஹ்வுடைய திருமறை வசனமும், அல்லாஹ்வின் தூதருடைய 
உபதேசங்களும் புறக்கனிக்கப்படுவதைக்  காணலாம்.

வயதான தாய்,தந்தையரைப் பெரும்பாலான மக்களால் அதிலும் படித்த சமுதாயத்தவர்களிடமும் புறக்கனிப்படுவதன் மூலம் அல்லாஹ்வுடைய திருமறை வசனமும்  புறக்கனிக்கப் படுவதால் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு வழித் திறந்து விடுகிறோம்.  

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.அதற்கு அண்ணலார் அவர்கள் தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது,பெற்றோர்களுக்கு நன்மை (பனிவிடை) செய்தல், அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் என்று கூறினார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மனித சமுதாயத்தை ஒழுங்குப் படுத்தும் நற்செயல்களில் முதன்மையானது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது, அதற்கடுத்த நற்செயல் பெற்றோர்களுக்கு நன்மை (பனிவிடை) செய்தல், அதற்கடுத்த நற்செயல் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் என்று அண்ணலார் அவர்களால்  வரிசைப்படுத்தி சிறப்பித்துக் கூறப்படுவதிலும் தாய், தந்தையரைப் பராமரிப்பது இரண்டாவது உயர்ந்த அந்தஸ்தில் இடம் பெறுவதை
க் கவனிக்க வேண்டும்.

தாய் தந்தையரை கவனிப்பது அல்லாஹ்விற்கு விருப்பமுள்ள நற்செயல்களில் உள்ளவையாகும். போருக்கு செல்லாமல் புறமுதுகிட்டு ஓடுபவனை அல்லாஹ் நரகவாதி என திருமறையில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான். தாய்,தந்தயரை கவனிக்காதவர்களையும் நரகம் செல்லட்டும் என அல்லாஹ்வின் தூதரும் கூறுகி
ன்றார்கள்.

அல்லாஹ் தன் ஆற்றல் மூலம் இரவு பகலை மாறி மாறி வரச்செய்வது போல் இளமையும், முதுமையும் மாறி மாறி வரச் செய்கின்றான்.

அவர்கள் முதுமை அடைந்ததும் அவர்களுடைய செயல் துடிப்புக் குன்றிவிடுவதால் சுயமாக சிந்திக்கக் கூடிய அறிவுத்திறனும் குன்றிவிடும். ஏறத்தாழ ஒரு குழந்தையைப் போன்றாகி வடுவார்கள்.

இன்று நாம் நம்முடைய இளமையில் முதுமையடைந்த நம்முடையப் பெற்றோர்களைப் பனிவுடன் உபசரித்தால் நாளை நம்முடைய முதுமையில் நம் பிள்ளைகளிடம் அதை நாம் அறுவடை செய்து கொள்ளலாம். (எவர் ஒருவர் தனது இளமையில் தனது வயதான தாய், தந்தையரைப் புறக்கனித்தாரோ அவர் தனது முதுமையில் தனது பிள்ளைகளால்  புறக்கனிக்கப்படுவதை இன்று நமது கண்களால் கண்டு வருகிறாம்.  '' முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ''.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்